அகமதாபாத், அக்.3: நாட்டிலேயே கிராமப்புற சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான விருதை பிரதமர் மோடி அகமதாபாத்தில் நடந்த விழாவில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினார்.
மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் சார்பில் ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவை குறித்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் வாரியாக ஆண்டுதோறும் தரவரிசைப் படுத்தப்படுகிறது. அதன்படி, 2019-ம் ஆண்டுக்கான ஆய்வு கடந்த ஆகஸ்டு 17-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை நாட்டின் 690 மாவட்டங்களில் உள்ள 17,400-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது.

இதில், தமிழகத்தில் 31 மாவட்டங்களில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமச் சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், அதிக புள்ளிகள் பெற்று இந்திய அளவில் தமிழகம் சிறந்த மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டது. காந்தி ஜெயந்தியையொட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் தூய்மை இந்தியா திட்ட விழா நேற்று நடைபெற்றது. இதில், ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தின் தரம் மற்றும் உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலத்துக்கான விருதை பிரதமர் மோடியிடம் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார்.