சென்னை, அக்.4: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் கடைசி மூன்று சுற்றுகளில் பதிவான வாக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் எண்ணப்பட்டு வருகிறது.

2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு எடுத்து வரப்பட்டது.

மூன்று பெட்டிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒரு பெட்டியில் தபால் வாக்குகளும் என நான்கு பெட்டிகள் கொண்டு வரப்பட்டன.

ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில், கடைசி மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கை செய்த இயந்திரங்களையும், 1500 தபால் வாக்குகளையும் கொண்டு வர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, இன்பதுரை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜெயச்சந்திரன், திட்டமிட்டபடி இன்று மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவித்தார். அதனடிப்படையில், ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள், தபால் வாக்குகள் கொண்ட பெட்டிகளை தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. இன்று 11:30 மணிக்கு மேல் இந்த வாக்குகள் மீண்டும் எண்ணப்படுகின்றன.

இத்தொகுதியில் பதிவான 1508 தபால் வாக்குகள் மற்றும் 19,20,21 ஆகிய சுற்றுகளில் பதிவான 16,083 வாக்குகளும் மீண்டும் எண்ணப்படுகிறது. உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மாடியில் இருக்கும் கூட்ட அரங்கத்தில், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடர்ந்த திமுக வேட்பாளர் அப்பாவு மற்றும் திமுக வக்கீல்கள் வாக்கு எண்ணும் இடத்தில் கூடியுள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கை 4 மணி நேரத்தில் நிறைவடையும் என்றும், தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 2 மணி நேரமும், ஈ.வி.எம் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மணி நேரமும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைய வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணி முடிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த அறிக்கை கிடைத்ததும் நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்கும்.

முடிவு வெளியிட சுப்ரீம் கோர்ட் தடை

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறு வாக்கு எண்ணிக்கையை வெளியிட உச்சநீதிமன்றம் இன்று திடீரென தடை விதித்துள்ளது.

இன்பத்துரை எம்எல்ஏ தொடர்ந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என்றும், ஆனால் முடிவை வெளியிட கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.