முசாபர்நகர், அக்.4: குழு வன்முறை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசை விமர்சிப்பதால் மட்டும் ஒருவர் தேசதுரோகி என்றோ,அர்பன் நக்சல் என்றோ முத்திரைக் குத்தப்படுவதை ஏற்க முடியாது. நாட்டின் ஒரு குடிமகன் கூட உயிர் பயத்தில் தனது சொந்த நாட்டிலேயே வாழும் நிலை இருக்கக் கூடாது என்று நாட்டின் 50 பிரபலங்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். இக்கடிதத்தைக் கடந்த ஜூலை மாதம் பிரதமருக்கு அனுப்பி வைத்தனர்.

இஸ்லாமிய மக்கள், சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தோடு நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்களை நிறுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரிக்கை வைத்து எழுதப்பட்டிருந்தது.

இந்த கடிதம் எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த முசாபர்நகர் நீதிமன்றம் பரபரப்பு ஒன்றை அளித்துள்ளது.

அந்த தீர்ப்பில் பிரதமருக்கு கடிதம் எழுதிய இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப், நடிகைகள் கொங்கனா சென், அபர்ணா சென் மற்றும் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 50 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.

இந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.