நாசிக், அக்.4: நாடு முழுவதும் ஆட்டோமொபைல் சந்தை வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் வெங்காய விலை அதிகரித்ததால் அதை ஏற்றிச் செல்வதற்காக நாசிக்கில் ஒரே நாளில் 250 டிராக்டர்கள் விற்பனையாகி உள்ளது.

சமீபத்தில் வெங்காய விலை உச்சத்தை தொட்டது. இதனால் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் விவசாயிகள் வெங்காயத்தை அதிக விலைக்கு விற்பனை செய்து அதிக லாபத்தை அடைந்தனர். இதன் மூலம் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மட்டும் 250 டிராக்டர்களை அவர்கள் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தவிர 21 கார்கள் மற்றும் சுமார் 500 இருசக்கர வாகனங்களும் ஒரே நாளில் விற்பனை ஆனதாக ஆட்டோமொபைல் வியாபாரிகள் கூட்டமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஒரே நாளில் ரூ .30 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டது எனவும், பரிவர்த்தனையில் 70 சதவீதம் ரொக்கமாக இருந்தது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.