திருச்சி, அக்.4: திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் முருகன், இரண்டு தெலுங்கு படங்களை தயாரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

அவன் மீது 800-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், போலீசில் சிக்காமல் தப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

திருவாரூரில் தப்பியோடிய முருகனின் உறவினர் சுரேஷ் தெலுங்கு படத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் தேடப்படும் கொள்ளையன் முருகன் டெல்லியில் தாஹி அலி தலைமையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நெருங்கிய கூட்டாளி திருநெல்வேலி தினகரனுடன் சேர்ந்து 800க்கும் மேற்பட்ட கொள்ளையில் முருகன் ஈடுபட்டுள்ளான்.

கூட்டணி அமைத்து 2008ம் ஆண்டில் இருந்தே முருகன் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளான். ஐ.டி நிறுவனங்கள் நிறைந்த பெங்களூரில் தான் அதிகமுறை கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். பெங்களூருவில் மட்டும் முருகன் மீது 180 கொள்ளை வழக்குகள் உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெங்களூரு போலீசால் கைது செய்யப்பட்ட முருகன் 2011ல் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளான். பெங்களூருவில் நெருக்கடி முற்றியதால் தனது கொள்ளை தொழிலை முருகன் ஐதராபாத்துக்கு மாற்றியுள்ளான்.

கொள்ளையன் முருகனின் முக்கிய ஆசை பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்பது தான் என்று போலீசார் தகவல் அளித்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் மனாசா வினாவா என்ற தெலுங்கு படத்தை கொள்ளையன் முருகன் தயாரித்துள்ளான். ரூ.50 லட்சம் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட தெலுங்கு படம் வெளியாகாததால் தொடர்ந்து கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளான். தனது பட கதாநாயகிக்கு ரூ.6 லட்சம் மட்டுமே ஊதியமாக கொடுத்துள்ளான் முருகன்.

இரண்டாவதாக ஆத்மா என்ற தெலுங்கு படத்தை தயாரிக்க திட்டமிட்ட முருகனை சைபராபாத் போலீஸ் கைது செய்தது. முருகன் தயாரித்த படத்தில் அவனது நெருங்கிய உறவினர் சுரேஷ் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. சினிமா ஆசையில் முருகன் உறவினர் சுரேஷும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். பாலமுருகன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் முருகனின் உறவினர் சுரேஷ் நடத்தி வந்துள்ளான். கொள்ளையன் முருகனின் உறவினர்களிடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.