சென்னை, அக்.5: மாமல்லபுரத்தில் சீனா அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு மோடி அளிக்கும் விருந்தில் பங்கேற்க வருமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. பிரதமர் மோடியும் சீனா அதிபர் ஜி ஜிங்பிங்கும் வரும் 11, 12-ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் முக்கிய பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாமல்லபுரத்தில் சீனா அதிபரை கௌவுரவிக்கும் வகையில் மோடி விருந்து அளிக்கிறார்.

இதில் பங்கேற்பதற்கு தமிழகத்தில் இருந்து மிகமுக்கிய நபர்களை மட்டுமே பிரதமர் அலுவலகம் அழைத்துள்ளது. முதலமைச்சர், துணை முதலமைச்சர், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அந்த வகையில் தனக்கு வந்துள்ள அழைப்பை ஏற்பதா என்பது குறித்து மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இடைத்தேர்தல் நடைபெறும் சமயத்தில் மோடியின் அழைப்பை ஏற்றால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்று திமுக தலைமை கருதுவதாக தெரிகிறது.

அண்மையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பை ஏற்று அவரை மு.க.ஸ்டாலின் சந்தித்ததை தொடர்ந்து இந்தி திணிப்பு தொடர்பான அமித்ஷாவின் பேச்சை கண்டித்து திமுக நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. அரசியல் வட்டாரத்தில் இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் மக்களவையில் துணை சபாநாயகர் பொறுப்பை திமுகவிற்கு வழங்க பிஜேபி முன் வந்தது. இந்த பதவியை பிடிப்பதில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தயாநிதிமாறன் ஆகியோர் தீவிரம் காட்டியதாக கூறப்பட்டது.

ஆனால் திமுக தலைமை இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்காமல் விட்டுவிட்டது. துணை சபாநாயகர் பதவி 3 மாதங்களாக காலியாக கிடக்கிறது. பிஜேபியின் அழைப்பை ஏற்று துணை சபாநாயகர் பதவியை ஏற்றால் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமின்றி சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதிலும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சுவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.