சென்னை, அக்.5: கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்றும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்சி தொடங்குவது உறுதி என்றும் கராத்தே தியாகராஜன் கூறினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலந்தூர் பகுதி சார்பில் நங்கநல்லூரில் இன்று மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு தென்சென்னை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

ஆலந்தூர் பகுதி செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவரும், ரஜினியின் நண்பருமான கராத்தே ஆர்.தியாகராஜன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:- ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதி. அடுத்த ஆண்டு அவரின் பிறந்தநாளுக்குள் கட்சியின் பெயரையும், கொடியையும் ரஜினிகாந்த் அறிமுகப்படுத்துவார்.ரஜினி ஆன்மிக அரசியல் நடத்த உள்ளதாக கூறியதற்கு வைகோ உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று அந்த வைகோவே நாட்டில் ஆன்மிகம் தழைத்துவிட்டது. கோயில்களுக்கு அதிக அளவில் மக்கள் படையெடுக்கின்றனர். அவர்களையும் நம் அரசியலுக்கு இழுக்க வேண்டும் என்றால் ஆன்மிக அரசியல் அவசியமானது என்ற கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினிக்கு அரசியல் தேவையில்லை என்ற கூறியிருந்தார். ஆனால் ஆந்திராவில் என்டிஆருக்கும், சந்திரபாபு நாயுடுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட போது ரஜினிதான் அவர்களை சமாதானம் செய்தார். ஆந்திர அரசியலிலேயே ரஜினி அப்போதே ஈடுபட்டதை சிரஞ்சீவி மறந்துவிட்டு பேசி உள்ளார். இன்றைய தினம் தமிழகத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாததால் வெற்றிடம் இருப்பதாக கூறுகின்றனர். அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய ஒரே சக்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் மட்டுமே உள்ளது.தமிழகம் முழுவதும் பொதுமக்களை சந்தித்து தொகுதி வாரியாக அவர்களின் குறைகளை கேட்டறிந்து தனியாக கோப்பு ஒன்றை தயார் செய்யுமாறு தன்னுடைய மாவட்ட செயலாளர்களுக்கு சூப்பர் ஸ்டார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.