வண்டலூர் பூங்காவில் மாரத்தான் ஓட்டம்

சென்னை

சென்னை, அக்.5: வன உயிரின வார விழாவையொட்டி, சென்னை வண்டலூர் பூங்காவில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 1,500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பூங்காவினுள் இந்திய அளவில் முதன்முறையாக நடந்த இந்த மாரத்தான் ஓட்டம், ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 முதல் 8-ம் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்தாண்டு சென்னையிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வன உயிரின பாதுகாப்பு சிறப்பு விழப்புணர்வு நிகழ்ச்சியாக, வண்டலூர் உயிரியல் பூங்கா வன ஓட்டம் என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

பூங்காவினுள் மாரத்தான் ஓட்டம் நடைபெறுவது இந்திய அளவில் இதுவே முதன்முறையாகும். இதனால், இந்த மாரத்தான் ஓட்டம் நிகழ்வு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறுகின்றனது.
இந்நிகழ்ச்சியை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர் தொடங்கி வைத்தார். முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் துரைராசு முன்னிலை வகித்தார்.

மேலும், தலைமை வன உயிரின காப்பாளர் சஞ்சய் குமார், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் இயக்குனர் யோகேஷ் சிங், அரசு அதிகாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், காமராஜ் துறைமுக அறக்கட்டளை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், காக்னிஷன்ட் டெக்னாலாஜிஸ் மற்றும் கிரசண்ட் கல்லூரி ஆகியவை செய்துள்ளன.