ஆர்.டி.ஓ. ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சென்னை

சென்னை, அக்.5: கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் சுரேஷ் குமாரின் ராமாபுரத்தில் உள்ள வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உத்தரவுப்படி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள 5 அரசு அலுவலகங்களில் திடீர் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.

அதன்படி, சென்னையின் இரு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முறையே ரூ.1,26 லட்சமும், ரூ.3.95 லட்சமும், விழுப்புரத்தில¢ நடந்த ஆய்வில் ரூ.90 ஆயிரமும், திண்டுக்கல் மற்றும் கரூரில் நடந்த ஆய்வில் முறையே ரூ.72 ஆயிரம், ரூ.86 ஆயிரம் என மொத்தம் ரூ.7.70 லட்சம் கணக்கில் வராத ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்னை கே.கே. நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கே.கே.நகர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ்குமாரின் ராமாபுரத்தில் உள்ள வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புபோலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.