சென்னை, அக்.8: ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிரான்ஸ் சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதை பெறுகிறார். விமானத்திற்கு சத் பூஜை செய்த பின் சிறிது நேரம் ரஃபேல் விமானத்தில் பறந்தார்.

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் பெறுவதற்கு 2016-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் கடும் சர்ச்சைக்கு உள்ளான பிறகு தற்போது இறுதி செய்யப்பட்டு இன்று நிறைவேற்றப்படுகிறது.

இதன் அடையாளமாக முதல் விமானத்தை பிரான்ஸ் சென்றுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங் பெறுகிறார். தேசிய விமானப் படையின் 87-வது ஆண்டு தினமும், விஜயதசமி திருநாளுமான இன்று, பிரான்ஸின் துறைமுக நகரமான போர்டோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. முதல் விமானத்தை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக் கொள்கிறார்.

இதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சார் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு திங்கள்கிழமை சென்றடைந்தார். ரஃபேல் போர் விமானத்தை பெற்றுக் கொண்டவுடன் அதில் சிறிது நேரம் பயணம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில், பிரான்ஸ் நாட்டின் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லி, ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்தின் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.முதல் ரஃபேல் போர் விமானம் தற்போது முறைப்படி ஒப்படைக்கப்பட்டாலும், முதல்கட்டமாக 4 விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதம்தான் இந்தியாவுக்கு வரவிருக்கிறது.இதனிடையே பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் ராணுவ தளபதிகள், தளவாட உற்பத்தி துறை அதிகாரிகள் ஆகியோருடன் ராஜ்நாத் சிங் பேச்சு நடத்தினார்.

லக்னோவில் பிப்ரவரி 5, 8 ஆகிய தேதிகளில் மேக்- இன் இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள ராணுவ கண்காட்சிக்கு வருமாறு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுக்கிறார்.