சென்னை, அக்.8: ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும், மக்களுக்கு நல்லது செய்ய அவரால் மட்டுமே முடியும் என்றும் தயாரிப்பாளர் கலைஞானம் கூறியுள்ளார்.

அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை வில்லனாக அறிமுகப்படுத்தினார் கே. பாலசந்தர். இதனையடுத்து ஒரு சில படங்களில் வில்லனாகவே தொடர்ந்தார். ஆனால் அவரை பைரவி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் கலைஞானம்.

கலைஞானத்தின் 75 ஆண்டு கால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் வகையிலும், அவரது 90-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும், கடந்த ஆகஸ்ட் மாதம் இயக்குனர் பாரதி ராஜா தலைமையில் பாராட்டு விழா சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்துக் கொண்டனர். அப்போது கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில் வசிப்பதால், தனது சொந்த செலவில் வீடு வாங்கித் தருவதாக கூறியிருந்தார் ரஜினி.

அதன்படி சென்னை விருகம்பாக்கத்தில், ரூ.45 லட்சம் மதிப்பில், 1320 சதுர அடியில் மூன்று படுக்கை அறை வசதிகள் கொண்ட வீட்டை ரஜினிகாந்த் வாங்கி கொடுத்துள்ளார்.

அந்த வீட்டின் பூஜையறையில் இன்று ரஜினிகாந்த் குத்து விளக்கு ஏற்றினார். பின்பு வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு தெய்வீமாக உள்ளது என தன் மகிழ்ச்சியை தெரிவித்து சென்றார்.

இதையடுத்து, கொடுத்த வாக்கை ரஜினி நிறைவேற்றியுள்ளார் என கலைஞானம் உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ரஜினிகாந்த் படத்தில் சொல்வது போல சொல்வதைத்தான் செய்வார், செய்வதைதான் சொல்வார் அதை இப்போது மீண்டும் நிருபித்துள்ளார்.

ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அவர் வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும். அதைதான் தமிழக மக்களும், அவரது ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். எனவே அவர் அரசிலுக்கு வருவது உறுதி. நல்லது செய்வதற்காகவே அவர் அரசியலுக்கு வருகிறார். இவ்வாறு கலைஞானம் கூறினார்.