மும்பை, அக்.8:  இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே, சமீபத்தில் பிறந்த தனது பச்சிளங் குழந்தையின் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், ரஹானேவை கலாய்த்து டிவிட் போட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் அஜின்கியா ரஹானே மற்றும் அவரது மனைவி ராதிகா தோபாவ்கர் ஆகியோருக்கு சமீபத்தில்தான் பெண்குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரஹானே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு, பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்துள்ளன. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் ரஹானேவை பாராட்டி டிவிட்டரில் பதிவு போட்டுள்ளார். அதில், ராதிகா மற்றும் அஜிங்கியாவுக்கு வாழ்த்துகள் பல. உங்கள் முதல் குழந்தைக்கு பெற்றோராக இருப்பது ஈடு இணையற்ற மகிச்சியை தரும். இந்த மகிழ்ச்சியிலேயே நனைந்திருங்கள். டயாப்பர்களை மாற்றிவிடும் இரவு காவலாளி என்னும் புதிய பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று செய்யுங்கள் என்று சச்சின் கலாய்த்துள்ளார்.

இதற்கு ரஹானே போட்டுள்ள பதில் டிவிட்டில், மிக்க நன்றி பாஜி. உங்களிடம் இருந்து சில டிப்ஸ்களை பெறுவதற்காக உங்களை மீண்டும் சந்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். ரஹானே தனது குழந்தை பருவ நண்பரான ராதிகாவை 2014-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.