சென்னை, அக்.9: சீன அதிபர் ஜி ஜின்பிங்க் மாமல்லபுரத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்ய இருப்பது குறித்து டெல்லியில் வெளியுறவுத்துறை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பிரதமர் மோடியுடன் சீன அதிபர் நடத்தும் பேச்சுவார்த்தையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

இது குறித்து டெல்லியில் இன்று வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்க் வரும் 11, 12 தேதிகளில் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். பிரதமர் மோடியுடன் அவர் நடத்தும் பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு நட்புறவை மேலும் நெருக்கமாக்குதல், வர்த்தக உறவை அதிகரித்தல் மற்றும் பிராந்திய, சர்வதேச பிரச்சனைகள் குறித்து பேசப்படும். இதையடுத்து ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சீனத் தூதர் சன் வெய்டாங் கூறுகையில், இரு தரப்பு நட்பை இரு நாடுகளும் வளர்த்துக் கொள்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றார்.

சீனாவில் உள்ள வுகான் என்ற இடத்தில் கடந்த ஆண்டு பிரதமர் மோடியும் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். 2017-ல் பூடான் எல்லையில் உள்ள டோக்லாமில் இருநாட்டு படைகளும் ஒரு மாதத்துக்கு மேலாக குவிக்கப்பட்ட நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து டோக்லாமில் ஏற்பட்ட பதற்றம் நீங்கியது. இதன் பிறகு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உள்ளிட்ட நான்கு நிகழ்வுகளில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசி உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

இரண்டாவது சீனத் தலைவர்:

1956 டிசம்பர் 5-ல் அப்போதைய சீன அதிபர் சூ என்லாய், அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேருவுடன் சென்னை வந்தார். சென்னையில் ஜெமினி ஸ்டுடியோ, பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களுக்கு பார்வையிட்டார். மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கும் அவர் சென்றார். 63 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது மீண்டும் சீன அதிபர் மாமல்லபுரம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சீன அதிபர் வெளிநாடுகளில் பயணம் செய்யும் போது அவர்களது சொந்த கார் மற்றும் உடமைகளையே பயன்படுத்துவது வழக்கம். இதையடுத்து ஜின்பிங் பயணம் செய்வதற்கான ஆடம்பர கார் உள்ளிட்ட 3 நவீன கார்கள் மற்றும் அவரது உடமைகள் சீன நாட்டு பி-747 ராட்சத சரக்கு விமானத்தில் செவ்வாய் கிழமை இரவு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சீன அதிபர் செல்லும் வழி மற்றும் தங்கும் இடத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு, அவருக்கான வசதிகளை செய்வது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஜின்பிங் பயணம் செய்வதற்கான காரில் சீன நாட்டு செங்கொடி பறக்க விடப்பட்டு இருக்கும். ஆடம்பரமிக்க இந்த கார் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஹான்கி லிமோசைன் ஆகும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ வேகத்திற்கு 8 விநாடி நேரத்திலேயே இந்த காரை செலுத்த முடியும். 18 அடி நீளம், 6.5 அகலம், 5 அடி உயரம் கொண்ட இந்த கார் 3152 எடை கொண்டது ஆகும். அதிக செலவில் ஆடம்பர வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட இந்த காரில் தான் சீன அதிபர் சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்கிறார்.

சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 கார்களும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவற்றுக்கான எரிபொருள் அதிகாரிகள் முன்னிலையில் நிரப்பப்படும்.