சென்னை, அக்.9: பிரதமர் மோடி – சீன அதிபர் ஸீ ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரம் வருகை தருவதையொட்டி, மாமல்லபுரம் கடலில், இருநாடுகளின் போர் கப்பல்கள் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் சீன நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வானது மாமல்லபுரத்தில் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக மாமல்லபுரத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடற்கரை கோவில் அருகே கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் ஒன்றாக நிகழ்ச்சிகளை பார்வையிட உள்ளனர். இதன் காரணமாக பாதுகாப்பு கருதி, இரு நாட்டு கடற்படைகளின் 4 போர்க்கப்பல்கள் மாமல்லபுரம் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.

4 நாட்டிகல் மைல் தொலைவுக்கு ஒரு போர்க்கப்பல் என 10 நாட்டி கல் மைல் தொலைவு சுற்றளவைக் கண்காணிக்கும் வகையில் இருநாடுகளும் தலா 2 போர் கப்பல்களை, மாமல்லபுரம் கடலில் நிறுத்தி வைத்துள்ளன. அதிவிரைவுப் படகுகளும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் நாளை முதல் 13 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று முதலே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. கடற்கரை கிராமங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாமல்லபுரம், சூலேரிக்காடு, கோவலம், நெம்மேலி, திருவிடந்தை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஓ.எம்.ஆரில் கேளம்பாக்கம், திருப்போரூர், பூஞ்சேரி கூட் ரோடு உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.