பெங்களூரு, அக். 9: சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பனா அக்ரஹார சிறையில் விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும், இதற்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரி கூறிய குற்றச்சாட்டு உண்மையே என்று விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று அதிகாலை முதல் பரபபன அக்ரஹாரா சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலா, இளவரசி தங்கி உள்ள அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பரப்பனா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்பட 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு தனியாகவும், ஆண்களுக்கு தனியாகவும் சிறை வளாகம் உள்ளது.

இந்த சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசிக்கு விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதாக காவல் அதிகாரி ரூபா புகார் கூறியிருந்தார். பெங்களூரு சிறையில் இருந்த போது சசிகலா வெளியே சென்று ஷாப்பிங் சென்று வந்ததாக படங்கள் வெளியாகின.

மேலும் விதிகளை மீறி அவர் வெளியில் தங்கியிருந்ததாகவும், மேலும் சிறப்பு சலுகைள் செய்யப்பட்டதாகவும், பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தலைமை அதிகாரியாக இருந்த ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இதற்காக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்ட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சிறை அதிகாரிகள், கைதிகள் மற்றும் அங்கு உள்ளவர்களிடம் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிகளை மீறி சசிகலா வெளியே சென்று வந்தது உண்மைதான் என்று அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சசிகலாவுக்காக சிறையில் தனியாக சமையல் செய்யப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறைத்துறை அதிகாரிகயாக இருந்த சத்யநாராயணா ரூ, 2 கோடி லஞ்சம் பெற்று சலுகைகள் அளித்தது உண்மை என்றும் விசாரணை முடிவில் தெரிய வந்துள்ளது. சசிகலா இரவு உடையுடன் வெளியில் சென்று வந்தது போன்ற வீடியோ காட்சிகளுடன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

சசிகலா மீதான இந்த புகார் நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு மேலும் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதனிடையே பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகளுக்கு தாராளமாக கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வழங்கப்படுவதாகவும், வெளியில் உள்ளவர்களோடு சரளமாக பேச செல்போன்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் பெங்களூரு மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை 5 மணி முதல் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று கைதிகளின் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், நூற்றுக்கணக்கான மொபைல் போன்கள், சிம்கார்டுகள், மதுபாட்டில்கள் சிக்கின. தொடர்ந்து ஒவ்வொரு அறையாக போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்கிய அறைகளிலும் சோதனை நடந்தது.

இங்கு அனுமதிக்கப்படாத பொருட்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.