புதுடெல்லி, அக்.9: மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததன் மூலம் காங்கிரஸ் கட்சியை நட்டாற்றில் தவிக்கவிட்டுச் சென்றுள்ளார் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சல்மான் குர்ஷித் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியால் அதிர்ச்சி அடைந்த ராகுல் காந்தி தலைமை பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலரும் எவ்வளவோ மன்றாடியும் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

அவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், கட்சியில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. சோனியா காந்தி தற்காலிக தலைவராக ஏற்றிருந்த போதிலும் அது வெறும் இடைக்கால ஏற்பாடுதான்.

காங்கிரஸ் கட்சியை நெருக்கடியான நேரத்தில் நட்டாற்றில் விட்டு விட்டார் ராகுல். இதனால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலமும் கேள்விக்குறியாகி விட்டது.

இத்தகைய சூழ்நிலையில் மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது சந்தேகமே.

காங்கிரஸ் கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை வேதனை அளிக்கிறது. ஆனால், அதற்காக காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேற மாட்டேன். பதவி சுகத்தை அனுபவித்து விட்டு காங்கிரஸ் நெருக்கடியான நிலையில் உள்ளபோது சிலர் வேறு கட்சிகளுக்கு ஓடுகிறார்கள். அவர்களைப் போல் நான் இருக்க மாட்டேன்.

இவ்வாறு சல்மான் தெரிவித்துள்ளார்.