சென்னை, அக்.9: நடிகர் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நடிகர் சங்கத்தில் முறையிடவும் முடிவு செய்துள்ளார்.

கன்னடத்தில் வெளியாகி ஹிட் ஆன முஃப்தி படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு படப்பிடிப்பில் முறையாக கலந்துகொள்ளவில்லை என்றும், இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாகவும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளார்.

இந்த புகாரி குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விரைவில் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே பல்வேறு சிக்கலில் சிக்கித்தவிக்கும் சிம்பு மீது மற்றொரு தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஞானவேல்ராஜா, நடிகர் கமல் மீது ரூ.10 கோடி வாங்கிக்கொண்டு திருப்பி தராமலும், படத்தில் நடிக்காமல் இழுத்தடித்து வருவதாக புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.