வதோதரா, அக்.9:  தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிராக இன்று தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்கா அணி முதல் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீராங்கனை லிசெல்லி லீ டக் அவுட் ஆகி அதிர்ச்சியளிக்க, அடுத்தடுத்து களமிறங்கியவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்தது. மரிசானே (54) தவிர ஒருவர் கூட அரைசதம் கடக்காமல் பெவிலியன் திரும்பினர். அதன்படி, 45.1 ஓவர்களிலேயே அனைத்துவிக்கெட்டுகளையும் பறிகொடுத்த தென்னாப்பிரிக்கா அணி 164 ரன்களில் சுருண்டது.

இதனையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை பிரியா புனியா அபரமாக விளையாடி அரைசதம் கடந்து 75 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அசத்தினார்.  மற்றொரு தொடக்க வீராங்கனை ஜெரேமியா அரைசதம் கடந்து 55 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கியவர்கள் தங்கள் பங்கிற்கு ரன்களை சேர்த்தனர். இதன்மூலம், 2 விக்கெட்டுகளை மட்டுமே விட்டுகொடுத்த இந்திய அணி 41.1 ஓவரிலேயே 165 எடுத்து இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதனால், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

மந்தனா விலகல்:
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். வலைப்பயிற்சியின் போது பந்து பட்டு, அவரது வலதுகால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்து பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன் கூறுகையில், இது லேசான எலும்பு முறிவு தான். அவரது கால்பாதத்தில் கொஞ்சம் வீக்கம் உள்ளது. காயத்தன்மையை அறிய இன்னும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து சோதிக்க வேண்டி உள்ளது. அதனால் மந்தனா எப்போது களம் திரும்புவார் என்பதை இப்போதே கணிப்பது கடினம். அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் மந்தனா ஆடுவது சந்தேகம்தான். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் 20 வயதான பூஜா வஸ்ட்ராகர் சேர்க்கப்பட்டுள்ளார், என்றார்.