சென்னை, ஏப்.11: எம்.ஜி.ஆர் மற்றும் லதா பற்றி டுவிட்டரில் கிண்டல் செய்தி வெளியிட்ட நடிகை கஸ்தூரியிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனிடையே நடிகை லதாவிடம் நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா- சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய போது ஆட்டம் ஸ்லோவாக சென்றது. இதனால் கடுப்பாகி போன கஸ்தூரி ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். ‘என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க’ என்று பதிவிட்டிருந்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கொதிப்படைந்தனர்.

இதனால் கடுப்பான நடிகை லதா கஸ்தூரியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது, ‘கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே? அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே? எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்?பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை என்று கடுமையாகத் திட்டியுள்ளார்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் எம்ஜிஆரை விமர்சிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், இதனால் நடிகை லதாவின் மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக தாம் பகிரங்க மன்னிப்பு கேட்டுகொள்வதாக கூறியிருந்தார். இதனிடையே எம்ஜிஆர்-லதாவை கிண்டல் செய்து டுவிட்டர் செய்தி பதிவிட்டது தொடர்பாக நடிகை கஸ்தூரியிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.