லாகூர், அக்.9:  பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெற உள்ள கடைசி டி20 போட்டியிலும் வெற்றி பெற்று, அந்த அணியை வாஷ் அவுட் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணி களமிறங்குகிறது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் இழந்தது. இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. முதல் மற்றும் இரண்டாம் போட்டிகள் முறையே 64 மற்றும் 35 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், டி20 தொடரையும் வசப்படுத்தியது.

இந்த நிலையில், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி லாகூரில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. இலங்கை அணிக்கு இது சம்பிரதாய போட்டியாகவே கருதப்பட்டாலும், இந்த போட்டியிலும் வெற்றிபெற்று பாகிஸ்தான் அணியை வாஷ்அவுட் செய்யுமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், சொந்த மண்ணில் தொடரை இழந்து ரசிகர்களின் அங்கலாய்ப்பை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி வொயிட் வாஷ் ஆவதை தடுத்து, இன்றைய போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலடைய போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.