லண்டன், அக்.9:  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில், தற்போது நடை பழகும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதுடன், தனது உடல்நலத்திற்கு பிரார்த்தனை மேற்கொண்டவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின்போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போட்டிகளில் இருந்து விலகி இருந்த ஹர்திக்குக்கு கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிக்சை நடந்தது. மருத்துவமனையிலேயே தற்போது ஓய்வில் இருக்கும் ஹர்திக், அறுவை சிகிச்சைக்குபின் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றார், அந்தவகையில், தான் முதன்முறையாக நடை பழகும் வீடியோவை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சிறு குழந்தையின் நடைகள். ஆனால், முழு உடற்தகுதிக்கான எனது பயணம் இங்கிருந்தே தொடங்குகிறது. எனக்கு ஆதரவாக இருந்த மற்றும் நான் நலம் பெற விரும்பிய ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள் என தெரிவித்துக்கொண்டுள்ளார்.