திருச்சி,அக். 9: திருச்சி நகைக்கடை கொள்ளையில் தப்பி ஓடிய சுரேஷ் பெங்களூரில் உள்ள காதலியை பார்க்க சென்றிருப்பதாக வந்த தகவலின் படி தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விரைந்து உள்ளனர்.இன்னும் ஓரிரு நாட்களில்கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இந்த நிலையில் கொள்ளை நடந்த மறுநாள் இரவு திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4லு கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நகைகளில் இருந்த பார்கோடுகளை ஆய்வு செய்து அவை திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளைய டிக்கப் பட்ட நகைகள் என்பதை போலீசார் உறுதி செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருச்சி நகைக் கடையில் நடந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்ட பிரபல கொள்ளையனான திருவாரூரை சேர்ந்த முருகன் என்பதும், முருகனின் அக்காள் மகன் சுரேஷ், மணிகண்டன் உள்பட 8 பேர் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டன், முருகனின் உறவினராக கனகவள்ளி என்ற பெண் ஆகிய இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் தப்பி ஓடிய சுரேசின் பொறுப்பில் தான் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை யடிக்கப்பட்ட மீதி நகைகள் இருக்கும் என கருதும் போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொள்ளையர்களை பிடிப்பதற்காக 7 தனி போலீஸ் படைகள் அமைக்கப் பட்டு உள்ளது. அந்த தனிப்படையில் ஒரு குழுவினர் பெங்களூருவுக்கு விரைந்து உள்ளனர். சுரேசுக்கு பெங்களூரில் ஒரு காதலி இருப்பதால் அவரை பார்ப்பதற்காக சுரேஷ் சென்றிருக்கலாம் என்ற தகவலின் படி தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர். கொள்ளையர்களை நெருங்கி விட்டதால் இன்றும் ஓரீரு நாட்களில் கொள்ளையர்களை கைது செய்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.