சென்னை, அக்.9: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 20-ந் தேதி வாக்கில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறியதாவது:- தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை அடுத்தவாரம் விலகி விடும். அதன்பிறகு காற்றின் திசை மாறும். அதன்பிறகு வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதை கணித்து விடுவோம். அநேகமாக வருகிற 20-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை நவம்பர் 2-ந்தேதி தொடங்கியது. இந்த ஆண்டு முன்கூட்டியே அக்டோபர் 20-ந்தேதி தொடங்கும் அறிகுறி காணப்படுகிறது.