சென்னை, அக்.9: எதிராளியை தாக்குவதற்காக தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வேகமாக உருவியபோது எதிர்பாராதவிதமாக படுகாயமடைந்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 26). ஆட்டோ டிரைவரான இவருக்கும் சரிதா என்பவருக்கும் ஒரு வருடம்முன்பு திருமணம் நடந்தது. மனோகரனுக்கு மதுபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த 2 மாதங்களாக சரிதா தனது தாய் வீட்டில் வசித்துவந்துள்ளார்.  இந்த நிலையில், நேற்றிரவு சரிதாவை காண சென்ற மனோகரன், அங்கு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அக்கம்பக்கத்தில் வசிக்கும் ராகவேந்திரன், சீனிவாசன் ஆகியோர் தகராறை விலக்கிவிட வந்துள்ளனர்.

அப்போது, ஆத்திரமடைந்த மனோகரன், தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வேகமாக உருவி, ராகவேந்திரனை குத்தியுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக மனோகரனுக்கு அடிவயிற்றில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த இருவரையும் (ராகவேந்திரன், மனோகரன்) மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மனோகரன் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.