20 நாட்களில் பூண்டி ஏரி நீர்மட்டம் 13 அடி உயர்வு

சென்னை

சென்னை, அக்.9: கிருஷ்ணா நீர் வரத்தால் கடந்த 20 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 13 அடி உயர்ந்துள்ளது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆகியோர் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகமானது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது.

கடந்த 18-ந் தேதி 12.55 அடியாக இருந்த நீர்மட்டம் 25-ந் தேதி 20.25 அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் தமிழக அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 25-ந் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு 28-ந் தேதி வந்தடைந்தது.கண்டலேறு அணையில் முதலில் 100 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு சராசரியாக வினாடிக்கு 800 கனஅடி வீதம்வந்து கொண்டிருக்கிறது. மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதனையடுத்து சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து பேபி கால்வாயில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு கடந்த 6-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த மாதம் 18-ந் தேதி 12.55 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 25.55 அடியாக பதிவானது. மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி ஏரி நீர்மட்டம் கடந்த 20 நாட்களில் 13 அடி உயர்ந்துள்ளது.