சென்னை, அக்.9: வில்லிவாக்கத்தில் உள்ள 7 கடைகளின் பூட்டை உடைத்து கல்லாப்பணம் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை மர்மநபர்கள் சுருட்டிச்சென்றுள்ளனர். வில்லிவாக்கம் சிட்கோ நகர் 9-வது தெருவில் அமைந்துள்ள ரேஷன் கடையை இன்று காலை வழக்கம்போல் திறக்க வந்த விற்பனையாளர் அருண், கடை திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதேபோன்று அவரது கடையின் அருகில் உள்ள பெரியசாமி என்பவரது மளிகை கடை பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், சிட்கோ நகர் 2-வது மெயின் ரோட்டில் உள்ள அடகு கடை பூட்டை உடைக்கவும் முயற்சி நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதே தெருவில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் உரிமையாளரின் ஏடிஎம் கார்டு, பான் கார்டு போன்றவற்றையும் திருடப்பட்டுள்ளது. இதன்அருகில் உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த சர்க்கரை மூட்டையை தூக்கிச் சென்றுள்ளனர். மேலும், 2-வது மெயின் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடை, டூவீலர் மெக்கானிக் ஷாப் ஆகியவற்றிலும் கொள்ளை முயற்சி நடந்தேறியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே இரவில் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள 7 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடிவருகின்றனர்.