சென்னை, அக்.9: தீபாவளி பண்டிகையையொட்டி, இரவில் பட்டாசுகளை சரக்கு வாகனங்களில் கொண்டு செல்ல தடை விதித்து தமிழக தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறறது. இதையொட்டி, தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கும் பணி, பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து மொத்த வியாபாரிகளுக்கும், பட்டாசு கடைகளுக்கும் பட்டாசுகளை அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகாசிப் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் இருந்து மாநிலத்தில் பெரும்பாலான பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றறன. அதேபோல திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, சங்கரன்கோவில், வேலூர், கடலூர் விழுப்புரம் ஆகிய இடங்களிலும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றறன.

இதற்கிடையே புதுச்சேரியில் இருந்து செஞ்சிக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி பட்டாசு ஏற்றி வந்த மினி லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து தொழிற்சாலைகளில் இருந்து பட்டாசு கடைகளுக்கு பட்டாசு களை சரக்கு வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கு இந்த ஆண்டு பல்வேறு புதிய விதிமுறைகளை தமிழக தீயணைப்புத் துறை விதித்துள்ளது. வாகன ஓட்டுநர்கள், பட்டாசு தொழிற்சாலை உரிமையாளார்கள், பட்டாசு கடை உரிமையாளார்கள் ஆகியோருக்கு தனித்தனியாக தீயணைப்புத் துறை விதிமுறைகளை வகுத்துள்ளது. பட்டாசு தயாரிப்பாளார்களும், வியாபாரிகளும் வெடி பொருள் சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றும்படி தீயணைப்புத் துறை வழக்கமாக அறிவுறுத்தும். ஆனால் செஞ்சி சம்பவத்தினால், இந்த ஆண்டு பல்வேறு புதிய விதிமுறைகளை தீயணைப்புத் துறை விதித்துள்ளது.

இரவில் கொண்டு செல்ல தடை: முக்கியமாக, தொழிற்சாலை உரிமையாளார்கள், பட்டாசு உரிமையாளர்கள் ஆகியோர் பகலில் மட்டும் வெடிப்பொருள்களை கையாள வேண்டும். இரவில் வாகனங்களில் கொண்டு செல்லக் கூடாது, உரிமம் பெற்றற வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் இருந்து மட்டும் வெடிபொருள்களை ஏற்ற வேண்டும், சாலை மார்க்கமாக வெடி பொருள்களை கொண்டு செல்லும்போது முதன்மை வெடிபொருள் அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும், வாகனத்தில் இரு உதவியாளார்கள் இருக்க வேண்டும், வாகனத்தில் பட்டாசுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், வாகனத்தின் 4 பக்கங்களிலும் வெடிபொருள் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அபாய எச்சரிக்கை குறியீடுகள் தெளிவாக இருக்க வேண்டும், வாகனத்தில் கண்டிப்பாக தீயணைப்பான் வைத்திருக்க வேண்டும் என தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.