புதுடெல்லி, அக்.9: போலி வாக்காளர்களை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஒரே வாக்காளர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணையும் இணைக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முட்டுக்கட்டை போட்டது. அதன்பின்னர் தேர்தல் கமிஷன் தனது ‘தவறில்லாத, உறுதிப்படுத்தப்பட்ட தேசிய வாக்காளர் பட்டியல்’ திட்டத்தின் கீழ் வாக்காளர்களின் ஆதார் எண்ணை சேகரித்தது.

இந்நிலையில் தேர்தல் கமிஷன் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு பரிந்துரையை அனுப்பியது. அதில், ‘வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கக்கோரும் வாக்காளர்களின் ஆதார் எண்களை கேட்டுப்பெறுவதற்கு தேர்தல் அதிகாரி களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகள் திருத்தப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தது. இந்த பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அமைச்சரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஒரே வாக்காளரின் பெயர் பல இடங்களில் இடம்பெறுவது தவிர்க்கப்பட்டு, தவறு இல்லாத வாக்காளர் பட்டியலை பெற முடியும்.