சென்னை, அக்.9: தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வரும் அதிமுக அரசை மேலும் வலுப்படுத்தும்வகையில் இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காணை ஒன்றியம் அன்னியூரில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது- தமிழக அமைச்சர்கள் உங்கள் பகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்கின்றனர். உங்கள் பகுதி குறைகளை கண்டறிந்து, நிவர்த்தி செய்ய இந்த பிரச்சாரம் உதவும். நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு மேலும் வலுசேர்க்க ஏதுவாக, இந்த இடைத் தேர்தலிலும் வரவிருக்கும் உள்ளாட்சித்தேர்தலிலும் அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

இப்போது இந்தப் பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். அதன்மூலம் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, 12 குளங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டு, நீர் சேமிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஞ்சனூர் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது- அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளில் (எல்கேஜி, யுகேஜி), தமிழ் ஆங்கிலம் மொழிகளில் கல்வி பயிற்றுவிக்கப்படும். தற்போது இரண்டு லட்சம் மாணவர்கள் வரை சேர்த்துள்ளனர்.

விஜயதசமி சிறப்பு சேர்க்கையின்போது கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்கள்வரை சேருவார் என எதிர்பார்க்கிறோம். அரசு பள்ளிகளில் 6 மாதங்களுக்குள் கணினி பொலிவுறு வகுப்பறைகள் அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும். மாணவர்களுக்கு உறையுடன் கூடிய காலணிஎன அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும். மாணவர்களுக்கு உரையுடன் கூடிய காலணி உள்ளிட்டவை வழங்கப்படும். இதனால் அரசு பள்ளிகள் மீதான மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.