ஸ்டாலின், ராமதாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு

சென்னை

சென்னை, அக்.9: வன்னியர் நலனுக்கு பாடுபட்டது யார் என்பது குறித்து மு.க.ஸ்டாலினும், பா.ம.க நிறுவனர் ராமதாசும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் வன்னியர் சமுதாய மக்களுக்கு பல சாதனைகளையும், எண்ணற்ற திட்டங்களையும் தீட்டி அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்துக்காக திமுக பாடுபட்டிருக்கிறது. ஆனால், இன்றைக்கு ஒரு உறுதிமொழியை நான் இந்த அறிக்கை வாயிலாக அளிக்க விரும்புகிறேறன். வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தவுடன், வன்னியர் சமுதாயத்துக்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணிமண்டபம் அமைக்கப்படும்.

வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராகவும், அண்ணா அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், கருணாநிதி அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி மறைந்த, ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை பா.ம.கவும் வன்னியர் நலனுக்கு பாடுபடவில்லை என்று கூறியுள்ளார். ராமதாஸ் பதில்:- இதற்கு பதிலளித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியடைவது மட்டுமின்றி, வைப்புத் தொகைகூட வாங்க முடியாதோ என்றற அச்சம் தான் அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் நகைக்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்பது உள்ளிட்ட புரட்டான வாக்குறுதிகளை வழங்கி, ஏழை மக்களை ஏமாற்றி கடனாளிகள் ஆக்கிய ஸ்டாலின், இப்போது விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளைச் சுரண்டும் நோக்குடன் பொய் வாக்குறுதிகளை வீசியுள்ளார் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.