கடலோர பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு

சென்னை

சென்னை, அக்.9: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பையொட்டி, பாக்ஜலசந்தி கடல் மார்க்கமாக அந்நிய நபர்கள் ஊடுருவாமல் தடுக்க சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். மாமல்லபுரத்தைச் சுற்றி உள்ள 70 மீனவ கிராமங்கள் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.18 எஸ்.பி.கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட நேற்று முதல் அக்டோபர் 13-ம் தேதிவரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் வாகன சோதனையும், கடலுக்குள் ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட கடல்பகுதிக்கு மீனவர்கள் சென்று மீன் பிடிக்கவும், அந்தப் பகுதியில் விமானம் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக. சென்னை, மாமல்லபுரம் ஆகிய 2 இடங்களும் முழுமையான போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் சீன அதிபர் செல்லும் மார்க்கத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்வது குறித்து நாளை முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும், சீன அதிபர் செல்லும் நேரத்தில் மட்டும் போக்குவரத்தை மாற்றி அமைக்க சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.