சென்னை, அக்.9: பாதசாரிகளிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்து, பைக்குகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சிவகங்கையை சேர்ந்தவர் முத்துசெல்வன் (வயது 26). இவரது நண்பர் புதுக்கோட்டையை சேர்ந்த கணேஷ்குமார். இவர்கள் இருவரும் பள்ளிக்கரணையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகின்றனர். கடந்த 3-ம் தேதி இருவரும் பாலவாக்கம் கடற்கரைக்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் வெட்டிவிட்டு 2 செல்போன்கள், ரூ.2 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளது.

இது குறித்த புகாரின்பேரில், நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பாலவாக்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 24) மற்றும் கூட்டாளிகள் விஜய், ராகவன், ஜெய்கணேஷ் ஆகியோர்தான் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில், அக்கறை பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் கோபாலகிருண்ஷனை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர். இவரிடமிருந்து, 2 கத்திகள், 2 செல்போன்கள், பைக்குகள், ரொக்கப் பணம் ஆகியவற்றை மீட்ட போலீசார், அவரது கூட்டாளிகளை தேடிவருகின்றனர்.