கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவே நடிக்க விருப்பம்: ஸ்ரீபிரியங்கா

சினிமா

சுரேஷ் காமாட்சி தயாரிப்பு இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் மிக மிக அவசரம். பெண் போலீசார் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாக கொண்ட இந்த படம் வெளியாகும் முன்பே விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. வரும் 11ந்தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களின் மூலம் நடிக்க தெரிந்த நடிகை என பெயர் எடுத்த ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், நாயகனாக அரீஷ்குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். சீமான், வழக்கு எண் முத்துராமன், ஈ.ராமதாஸ், லிங்கா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பெண் போலீஸ் வேடத்தில் நடித்த அனுபவம் பற்றி ஸ்ரீபிரியங்கா நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

கேள்வி:- பெண் போலீஸ் வேடத்தில் நடித்த அனுபவம்?
பதில்:- போலீஸ் கதாபாத்திரம் என்பதால் மட்டும் அல்ல, அதன்மூலம் பெண்களுக்கு ஒரு செய்தி சொல்ல கூடிய கதாபாத்திரம் என்பதாலும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம் என்பதாலும் இந்த படத்தில் நடிக்க சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். நான் இதுவரை இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எதையும் மனதில் ஏற்றி வைத்துக் கொள்ளவில்லை. இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எந்த ஹோம் ஒர்க்கும் பண்ணவில்லை. சுரேஷ் காமாட்சி இந்த படத்தின் ஸ்கிரிப்டை கொடுத்ததும் அதை முழுவதுமாக படித்து அந்த சாமந்தி கேரக்டராக நான் இருந்தால், எப்படி உணர்ந்து இருப்பேனோ அதையே ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக பிரதிபலித்து இருக்கிறேன்.

கே:- மிக மிக அவசரம் டைட்டில் காரணம்?
ப:- இந்த படத்தை ஒரு விஷயத்துக்காக மட்டும் அல்ல, பல விஷயங்களுக்காக கட்டாயம் பார்க்க வேண்டும். மிகமிக அவசரமான இந்த உலகில் நம் அருகில் உள்ளவர்களை, அவர்கள் படும் கஷ்டங்களை கண்டுகொள்ளாமலேயே பெரும்பாலும் ஓடி கொண்டிருக்கிறோம். ஒரு நிமிடம் நின்று, பிரச்சினையான சமயத்தில் அதை எப்படி எதிர்கொள்வார்கள் என நினைத்து அவர்களுக்கு ஆறுதலாக உதவச் சென்றாலே நாட்டில் பல பிரச்சனைகள் தோன்றவே தோன்றாது. அதேபோல சின்ன சின்ன படங்கள் தானே என்று தயவு செய்து ஒதுக்காதீர்கள். அதில்தான் வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். இந்த படமும் அப்படித்தான்.

கே:- அடுத்த எந்த படத்தில் நடிக்கிறீர்கள்?
ப:- 2 படங்களில் நடிக்க பேச்சுவார்த்தையில் உள்ளது. இந்த படம் வெளியான பின்பு மக்கள் அதற்கு கொடுக்கும் வரவேற்பை பொருத்து, இனி எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து அதன் பிறகே படங்களை தேர்ந்தெடுக்க போகிறேன்.

கே:- எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம்?
ப:- அப்படி எந்த ஒரு ஐடியாவும் என் மனதில் இல்லை. இந்த படத்தைப் பார்த்துவிட்டு தாங்கள் உருவாக்கும் வலுவான கதாபாத்திரத்தில் ஸ்ரீபிரியங்காவை நடிக்க வைக்கலாம் என்று என்னை நம்பி வரும் இயக்குநர்களின் படங்களில் நடிக்க தயாராகவே இருக்கிறேன்.