திருச்சி, அக். 10: திருச்சி நகைக்கடை கொள்ளையில் தேடப்பட்டு வந்த சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவனிடம் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன் பதுங்கி உள்ள இடம் மற்றும் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மறைத்து வைத்துள்ள இடம் ஆகியவை குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். கொள்ளையர்கள் எவ்வித அடை யாளத்தையும், சிறிய தடயத்தையும் கூட விட்டு வைக்காமல் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.  போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் திருவாரூர் மணிகண்டன் சிக்கினார். அவருடன் வந்த சீராத்தோப்பு சுரேஷ் என்பவர் தலைமறைவானார்.

சீராத்தோப்பு சுரேஷ் குறித்து போலீசார் விசாரித்தபோது அவர் பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளி மற்றும் உறவினர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, முருகன் அண்ணன் மகன் முரளி, மணிகண்டன், சுரேஷின் தாயார் கனகவள்ளியை போலீசார் கைது செய்து 4 நாளைக்கு முன்பு ஜெயிலில் அடைத்தனர். நகைகைள பறிமுதல் செய்தனர். இந்தநிலையில், தப்பி ஓடி தலைமறைவாக இருந்த சுரேஷ் இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றம் நீதிபதி விக்னேஷ் பிரபு முன்னிலையில் சரண் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

கோர்ட்டில் சரண் அடைந்த சுரேசை திருச்சி தனிப்படை போலீ சார் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முதல் குற்றவாளியும், லலிதா ஜூவல்லரி கொள்ளைக்கு திட்டம் போட்டு கொடுத்தவனுமான திருவாரூர் முருகன் இருப்பிடம் மற்றும் ரூ.10 கோடி தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்தும் வேறு நபர்கள் இதில் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்த உள்ளனர்.சுரேஷ் தனது மாமாவான கொள்ளையன் முருகன் தயாரித்த மனசவினவ மற்றும் ஆத்மா என்ற 2 தெலுங்கு படத்தில் கதாநாயகனான நடித்துள்ளான். ஆனால் இந்த 2 படங்களும் பைனான்ஸ் பிரச்சினையால் வெளிவரவில்லை.

2008-ம் ஆண்டு முதல் தனது மாமா முருகனுடன் சேர்ந்து சுரேஷ் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, சென்னை ஆகிய இடங்களில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். பாதியில் நின்ற படங்களை மீண்டும் தயாரித்து முடிக்க பணம் தேவைப்படவே திருச்சி லலிதா ஜூவல்லரி கடையை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. சுரேஷிடம் போலீசார் நடத்தும் விசாரணையில் எப்படியும் முருகன் சிக்குவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் சரண் அடைந்து விட்டதால், லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பான விசாரணை திரும்பவும் சூடு பிடித்துள்ளது.