சென்னை,அக்.10: உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் சென்னையில் இன்று நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.அதன்படி முதற்கட்ட பணியாக மாநில தேர்தல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான பயிற்சி முகாம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெற்றது. தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு, இவிஎம் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்தல், தேர்தலுக்கான பொருட்களை தயார் செய்தல், வாக்காளர்பட்டியல் தயாராக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

ஏற்கெனவே மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 5 அலுவலர்கள் வரை இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளார்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், முன்னேற்பாடுகளை செய்தல் தொடர்பாக இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இங்கே பயிற்சி பெறும் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மற்ற அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி வழங்குவார்கள்.உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வாக்காளர்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதைதொடர்ந்து தமிழக காவல்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீசாரை வரும் 15ம் தேதிக்குள் பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து காவல் துறை ஐஜிக்கள், டிஐஜிக்கள், அனைத்து மாநகர கமிஷனர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை தமிழக டிஜிபி திரிபாதி அனுப்பி உள்ளார். அதன்படி உயர் போலீசார் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் பணியிடமாற்றம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.