சென்னை, அக்.10: சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்த சிவகுமார் (வயது 55) மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்தார். சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்துவந்தவர் சிவகுமார் (வயது 55). அயனாவரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்த இவர், பணியிட மாற்றம் பெற்று சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பயிற்சி பணியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது மனைவி சாந்தி திடீரென கண்விழித்துள்ளார். அப்போது, அருகில் சிவகுமார் படுக்கையில் இருந்து தலைசரிந்த நிலையில் பேச்சுமூச்சின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டுச்சென்றுள்ளார்.

ஆனால், சிவகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தூக்கத்திலேயே சிவகுமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவருக்கு, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தமிழ்நாடு காவலர்துறையில் காவலர் சங்கத்தின் அங்கீகாரம் கேட்டு போராடியவர் சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.