முசாபர்பூர், அக்.10: சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதால் இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கை பீகார் போலீசார் ரத்து செய்து விட்டனர். இதுபற்றி முசாபர்பூர் சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் கூறுகையில், 49 பேர் மீது கூறப்பட்ட புகார்கள் விஷமத்தனமானவை என்றும், அவற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்து இருப்பதால் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக முசாபர்பூர் நகர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததற்கு நாடு தழுவிய அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கை தொடர்ந்த் உள்ளூர் வக்கீலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் தவறான தகவலை தெரிவித்ததாக தெரிய வந்தது. இதை தொடர்ந்து வழக்கு தொடர்ந்த வக்கீல் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர் மீது தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.