திருவள்ளூர் அக். 10: கோயில் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூரை அடுத்த பூண்டி மற்றும் நெய்வேலி கிராமத்தில் உள்ள கோவில் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதால்அவற்றை மீட்க கோரி அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
பூண்டி மற்றும் நெய்வேலி பகுதியில் வசித்து வருகிறோம் நெய்வேலி கிராமத்தில் வேணுகோபால் சாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. இதனை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து விற்று விட்டனர். இது தொடர்பாக நாங்கள் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.

மேலும் அந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மேலும் சிலர் அபகரிக்க முயற்சி செய்கிறார்கள் .இதுபற்றி கிராம மக்கள் கேட்டதற்கு கொலை மிரட்டில் விடுக்கின்றனர். இதுகுறித்து பெண்ணலூர் பெட்டை பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோயில் நிலத்தை அபகரிக்க முயன்று பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்