சென்னை, அக்.11: சீன அதிபர் ஜி ஜின்பிங் மாலையில் மத்திய கைலாசை கடந்து ராஜீவ் காந்தி சாலை வழியாக மாமல்லபுரம் செல்வதையொட்டி இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர், எம்ஆர்டி ரெயில் நிலையங்களில் முன்புற வாயில்கள் மூடப்பட்டது. ரெயில் சேவை நிறுத்தப்படவில்லை என்பதால் பயணிகள் பின்புற வாயில் வழியாக செல்லலாம் என அறிவிப்பு ஒட்டப்பட்டு இருந்தது. இதேபோல மத்திய கைலாஷ், சோழிங்கநல்லூர் இணைப்பு சாலையில் பகல் 12 மணியில் இருந்து மூடப்பட்டது.

ஜிஎஸ்டி சாலையில் வழிநெடுக வாகனங்கள் நின்று கொண்டே இருந்தன. மெட்ரோ ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற போதிலும், பயணிகள் கடும் பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சீன அதிபரின் வாகன வரிசை விமான நிலையத்தில் இருந்து வந்ததை மெட்ரோ ரெயிலில் இருந்து பயணிகள் பார்க்க முடிந்தது. மாநகர போக்குவரத்து சேவை நிறுத்தப்பட வில்லை என்ற போதிலும் சில வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டது. கிண்டி மேம்பாலம், ஜி எஸ் டி சாலை நெடுகிலும் வாகனங்கள் மதியம் வரை நின்று கொண்டே இருந்தன.