சென்னை, அக்.11: சென்ன்ன போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 10 மணி அளவில் ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சீன அதிபர்- மோடி வருகையை தொடர்ந்து ஏற்கனவே அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் அவர்கள் உடனடியாக அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வெடிகுண்டு எதுவும் இல்லாததால் அது வெறும் புரளி என்று தெரியவந்துள்ளது. இதனிடையே மிரட்டல் விடுத்த அந்த தொலைபேசி எண்ணை போலீசார் விசாரணை செய்ததில் அது ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வந்த அழைப்பு என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில் மிரட்டல் விடுத்த அந்த நபர் மணிகண்டன் (வயது 19) என்பதும், சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரது உறவினரிடம் விசாரணை நடத்திய போது அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும், ஏற்கனவே கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. தற்போது ஸ்டான்லியில் சிகிச்சைக்கா வந்த போது இந்த மிரட்டல் அவர் விடுத்ததாக தெரிவித்துள்ளனர்.