– டி.பாபு –
கோவளம், அக்.12: தமிழகத்தில் இன்று நடந்த பேச்சு வார்த்தை மூலம் இந்திய – சீன உறவில் புதிய சகாப்தம் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளில் ஆக்கப்பூர்வமான தீர்வுகள் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். சென்னையில் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மறக்க முடியாதது என்று சீன அதிபர் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். இன்று காலை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து பிரதமர் மோடியை சந்திக்க காலை 9.40 மணியளவில் சீன அதிபர் புறப்பட்டு கோவளம் சென்றார். அவர் செல்லும் வழியில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மாணவர்கள் என இந்தியா – சீனா தேசிய கொடிகளை ஏந்தி வரவேற்றனர். 30 நிமிட பயணத்திற்கு பிறகு காலை 10.10 மணியளவில் கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்கு வந்தடைந்த சீன அதிபரை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.

வங்கக்கடலை நோக்கி அமைந்த கண்ணாடி அறையில் காலை 10.20 மணியளவில் பேச்சுவார்த்தையை தொடங்கினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 11.20 மணிக்கு பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் இரு நாடுகளின் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த இருநாட்டு இடையே உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மதிப்பிக்குரிய விருந்தினரை வரவேற்பதில் நான் பெருமை அடைகிறேன், உலகின் தொன்மையான மொழியான தமிழில் பேசுகிறேன் என தமிழில் தனது பேச்சை மோடி தொடங்கினார் . 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டிற்கும் சீன இடையே ஆழமான கலச்சாரம், வணிக உறவு இருந்தது. சீன வூ ஹானில் நடைபெற்ற சந்திப்புக்கு பின்னர் இந்திய சீன இடையே ராஜதந்திர உறவுகள் மேம்பட்டுள்ளன. சீனாவும், இந்தியாவும் உலக அளவில் பொருளதார சக்தியாக திகழ்கிறது. சென்னை மிஷன் என்ற இந்த பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளின் உறவில் புதிய வரலாறு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவருடைய கருத்தை ஆமோதிக்கும் வகையில் இருநாடுகளின் உறவில் புதிய அத்தியாயம் துவங்கியிருப்பதாக சீன அதிபர் ஜின்பிங் குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து சீன அதிபர் ஷி ஜின்பிங்கு பேசுகையில்: மிகவும் சிறப்பான வரவேற்பை கண்டு வியந்து போனேன். எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களின் வரவேற்பின் மூலம் உங்களின் உண்மையான அன்பை எங்களால் உணர முடிந்தது. தமிழகத்தை எங்களால் என்றுமே மறக்க முடியாது. தமிழகத்தின் விருந்தோம்பலை என்னாலும், எங்களது அதிகாரிகளாலும் மறக்கவே முடியாது. தமிழகத்தின் விருந்தோம்லை நானும், எனது நண்பர்களும் நன்கு உணர்ந்து உள்ளோம். இந்த பேச்சுவார்த்தை என்பது சீன மக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை மூலம் இருநாட்டு உறவுகளும் மேம்பட்டு வருகிறது. இருநாட்களிடையே இதுபோன்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற வேண்டும். அது தான் ஒரு பில்லியன் மக்கள் தொகையை கொண்ட நமது நாடுகளுக்கு நல்லது. நானும் பிரதமர் மோடி நண்பர்கள், இருநாட்டு விவகாரம் தொடர்பாக இருவரும் மனப்பூர்வமாக உரையாடினோம். மாமல்லபுரத்தை என்னாலும், சீன அதிகாரிகளாலும் வாழ்நாளில் இனி மறக்க முடியாது. இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளில் ஆக்கப்பூர்வமான தீர்வுகள் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் பேசினார்.