சீன அதிபரை வாயில் வரை வந்து வழியனுப்பிய மோடி

சென்னை

மாமல்லபுரம், அக்.12: இரண்டு நாள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று மதியம் 1,40 மணியளவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் இருந்து காரில் சென்னை விமான நிலையம் புறப்பட்டார். அவரை கோவளம் நட்சத்திர ஓட்டலின் வாயில் வரை வந்து பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். மீனம்பாக்கம் வரை காரில் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் அங்கு தயாராக நின்ற விமானத்தில் நேபாளம் புறப்பட்டார்.

அவருடன் வந்த சீனக் குழுவினர் இன்னொரு விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர். சீன அதிபர் காரில் சென்ற போது ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் இணைப்புச் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டது. மதியம் 2 மணிக்கு பிறகு போக்குவரத்து சீரடைந்தது. சீன அதிபர் காரில் சென்ற சமயத்தில் இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் ரெயில் நிலையங்களின் முன்வாயில்களும் மூடப்பட்டன. எம்ஆர்டிஎஸ் ரெயில் சேவையும் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.