ஸ்டாக்ஹோம், அக்.12: 2019-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்டை நாடான எரித்ரியாவுடன் நீடித்து வந்த பகைமையைப் போக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக, நார்வே நாட்டைச் சேர்ந்த நோபல் தேர்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எரித்ரியாவுடன் நீடித்து வந்த பகைமையை ஒழிக்க அபி அகமது மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவர் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார், எத்தியோப்பியா, கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக் காவில் அமைதி ஏற்படுவதற்குத் துணைநின்ற அனைவரையும் கௌரவிக்கும் வகையில் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு தரப்பின் முயற்சியால் மட்டுமே அமைதியை ஏற்படுத்திவிட முடியாது. எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு கண்டு அமைதியை ஏற்படுத்த எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, எரித்ரியா அதிபர் ஆஃப்வொர்கியும் தக்க ஒத்துழைப்பு அளித்தார். இந்த அமைதி ஒப்பந்தம், இரு நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு உதவும் என நோபல் தேர்வுக் குழு நம்பிக்கை கொள்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்றது தொடர்பாக அபி அகமது கூறுகையில், ‘‘இது ஆப்பிரிக்காவுக்கும், எத்தியோப்பியா வுக்கும் உரிய பரிசாகும். அமைதி நட வடிக்கைகளில் ஈடுபட மற்ற ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு இந்தப் பரிசு ஊக்கமளிக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.