வேலூர், அக்.12: காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் மாற்றி அமைக்க ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் தேவராஜ் மற்றும் பத்திர எழுத்தர் ஆகியோர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:- வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் பெங்களூரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கழிஞ்சூர் உள்ள சசிகுமார் மற்றும் அவருடன் பிறந்த நான்கு பேருக்கு சொந்தமான பத்திரத்தை 5 பேருக்கு மாற்றி தருவதற்காக காட்பாடி சார் பதிவாளரை அணுகியுள்ளார்.

சார்பதிவாளர் தேவராஜ் பத்திரத்தை மாற்றுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் சசிகுமார் வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சசிகுமாரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். சசிகுமார் அந்தப் பணத்தை காட்பாடி சார்பதிவாளர் தேவராஜ், சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எழுத்தர் சந்திரமோகன் என்பவர் இடம் கொடுக்க கூரியுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ரூ. 1லட்சம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் தேவராஜ், பத்திர எழுத்தர் சந்திரமோகன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் லஞ்சப்பணம் 1 லட்சத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்