சென்னை, அக்.12: மருத்துவக்கல்லூயில் சேருவதற்கு ஆள் மாறாட்டம் செய்தது, போலி ஆவணங்கள் தயாரித்தது ஆகியவை தொடர்பாக மேலும் ஒரு சென்னை மாணவி தாயாருடன் இன்று கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியை சேர்ந்த இந்த மாணவி சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தவர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண் டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த சிபிசிஐடி விசாரணையில் உதித் சூர்யாவுடன், பிரவீன், ராகுல் ஆகியோரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் கள் அனைவரும் அவர்களது தந்தையருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, தமிழகம் முழுக்க உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடந்தது. இதில், தருமபுரி மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர் முகமது இர்பான் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்து இருப்பதை சிபிசிஐடி போலீசார் கண்டுப்பிடித்தனர. இதையடுத்து அவரது தந்தை வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது ஷபியை போலீஸார் கைது செய்தனர். கடந்த 1-ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் இர்பான் சரணடைந்தார்.
முகமது ஷபியிடம் தேனி சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் முகமது ஷபி மருத்துவப் படிப்பை பாதியிலேயே விட்டவர் என்பது தெரியவந்தது. ஆனால் அவர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அவர் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், முகமது ஷபி வாக்குமூலத்தின் அடிப்படையில் இடைத்தரகர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த உதித்சூர்யா, பிரவீன், ராகுல் மற்றும் இவர்களது தந்தைகள் வெங்கடேசன், சரவணன், டேவிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் மருத்துவம் பயின்று வரும் பிரியங்கா மற்றும் அவரது தாயார் மைனாவதி ஆகியோரை போலீசார் தேனிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் இன்று தேனியில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஆள்மாறாட்டம் செய்தல், போலி ஆவணங்கள் தயார் செய்தல், சதி திட்டம் தீட்டியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.