புதுடெல்லி, அக்.14: ராதாபுரம் தொகுதி சட்டசபை தேர்தல் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் வழக்கு தொடர்பாக திமுக முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை செய்வதற்கு எதிராக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போது, மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். எனினும் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட வரும் 23-ம் தேதிவரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் மனு தொடர்பாக திமுக வேட்பாளர் அப்பாவு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் ஒருவார கால விடுமுறைக்கு பிறகு இன்று காலை உச்ச நீதிமன்றம் செயல்பட துவங்கியது. அப்போது, அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் மனுவை விரைவாக விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். உச்ச நீதிமன்றம் விரைவான விசாரணைக்கு மறுப்பு தெரிவித்ததால், இடைத்தேர்தல் முடிவுகளோடு ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவும் வெளியாகும் என கூறப்படுகிறது.