ஸ்டட்கர்ட், அக்.14:  உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 22 வயதே ஆன அமெரிக்க இளம் வீராங்கனை சரித்திர சாதனை நிகழ்த்தியுள்ளார்.

உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று பெண்களுக்கான புளோர் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த 22 வயதேயான இளம் வீராங்கனை சிமோன் பைல்ஸ் தனது சாகசத்தை நிகழ்த்தி, அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தார். பிரமிப்பூட்டும் இவரின் சாகத்திற்கு மொத்தம் 15.133 புள்ளிகள் வழங்கப்பட்டு, முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டு, தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அத்துடன், பேலன்ஸ் பீம் பிரிவிலும் சிமோன் பைல்ஸ் மகுடம் சூடினார்.

இந்த தொடரில் இது அவரது 5-வது தங்கப்பதக்கமாகும். இதன் மூலம் உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் அவரது ஒட்டுமொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதால், உலக ஜிம்னாஸ்டிக் வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்னும் சரித்திர சாதனையை சிமோன் பைல்ஸ் நிகழ்த்தியுள்ளார். பெலாரஸ் வீரர் விடாலி ஸ்செர்போ 23 பதக்கம் வென்றதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது, இவரை பின்னுக்கு தள்ளி 25 பதக்கங்கள் வென்று சிமோன் பைல்ஸ் சாதனை படைத்துள்ளார்.