சென்னை, அக்.14: தொடர் படப்பிடிப்பால் ஓய்வெடுப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென இமயமலை சென்றார். ரிஷிகேசில் உள்ள தயானந்தர் ஆசிரமத்தில் அவர் 10 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பில் கடந்த 6 மாதங்களாக ரஜினி தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ரஜினிகாந்தின் 168-வது படத்திற்கான அறிவிப்பும் அதிரயாக வெளியானது. தர்பார் படத்தை தொடர்ந்து அவர் நடிக்க உள்ள புதிய படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்ததும் வழக்கம்போல இமயமலை சென்று 10 நாட்கள் ஓய்வெடுக்க ரஜினி திட்டமிட்டிருந்தார்.` இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக நேற்று காலை திடீரென இமயமலை புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று அங்கிருந்து ரிஷிகேசுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார். நேற்று மாலை ரிஷிகேசில் உள்ள தயானந்தர் ஆசிரமத்திற்கு சென்ற ரஜினியை மடத்தின் நிர்வாகிகள் வரவேற்றனர். 10 நாட்கள் அங்கேயே தங்கி தியானம் மற்றும் யோகா பயிற்சிகளை அவர் மேற்கொள்ள உள்ளார். இடையிடையே ரசிகர்களையும் அவர் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ரஜினி வந்த தகவலறிந்த ரசிகர்கள் நேற்றே ஆசிரமத்திற்கு படையெடுத்தனர். அங்கு ஒரு சிலருடன் ரஜினி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.