துபாய், அக்.15:  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டி சமனாகும் பட்சத்தில் பின்பற்றப்படும் சூப்பர் ஓவர் முறையில், சில திருத்தங்களை மேற்கொள்ள சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) முடிவு செய்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி சமனாகும் பட்சத்தில் வெற்றி பெறும் அணியை நிர்ணயிப்பதற்காக சூப்பர் ஓவர் முறை கடைக்கப்பிடிக்கப்பட்டுவருகிறது. ஆனால், இந்த சூப்பர் ஓவரும் சமனாகும் பட்சத்தில், அதிக பவுண்டரிகள் அடித்த அணி, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. இந்த முறையில்தான், நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்தகைய முறை, கிரிக்கெட் வட்டாரங்கள் உட்பட பல்வேறு தரப்பிடையே பெரும் விமர்சனைக்கு உள்ளானது.

இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் சில விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், சர்ச்சைக்குள்ளான சூப்பர் ஓவர் முறையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, சூப்பர் ஓவரும் சமனில் முடியும் பட்சத்தில், பவுண்டரி அடிப்படையில் வெற்றி முடிவு செய்யப்படமாட்டாது என்றும், அதற்கு மாற்றாக. தெளிவான முடிவு (வெற்றி பெரும் அணியை உறுதி செய்யும்வரை) எட்டப்படும் வரை, சூப்பர் ஓவர் முறையே பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜிம்பாப்வே மற்றும் நேபாளம் கிரிக்கெட் வாரியங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொண்டது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை ஐசிசி அறிவித்துள்ளது.