சென்னை, அக்.15: முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி மரணம் தொடர்பாக அவதூறாக பேசிய சீமான் பேச்சு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விசாரித்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளதாகவும். சீமான் மீது கட்சிகள் அளித்த புகார் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் மூலம் இதுவரை 1.87 கோடி பேர் வாக்களர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 86 சதவீதம் வாக்காளர்கள் சரிபார்த்துள்ளனர்.

குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 8 சதவீதம் மட்டுமே சரிபார்த்துள்ளனர். கோவையில் 37.53 சதவீதமும், திருச்சியில் 36.96 சதவீதமும், மதுரையில் 13.58 சதவீதமும், நெல்லையில் 34 சதவீதம், நீலகிரியில் 54 சதவீதம், கன்னியாகுமரியில் 23 சதவீதம், அரியலூரில் 69 சதவீதம் வாக்காளர்கள் சரிபார்த்துள்ளனர். தற்போது கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள நாட்களில் மீதமுள்ள வாக்காளர்களும் பட்டியலில் சரிபார்த்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ்காந்தி குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவதூறாக பேசிய தொடர்பாக விக்கிரவாண்டி காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீமானின் இந்த பேச்சு தொடர்பாக கட்சிகள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சீமான் பேச்சு தொடர்பாக விசாரித்து விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளேன்.அறிக்கை தர தேர்தல் அதிகாரி உத்தரவு

கருத்துக் கணிப்புக்கு தடை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துக் கணிப்பு அமைப்பின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஷெபாலி ஷரன் கூறுகையில், ‘எந்தவொரு கருத்துக் கணிப்பு அல்லது வேறு எந்த கருத்துக் கணிப்பு முடிவுகளையும் உள்ளடக்கிய எந்தவொரு தேர்தல் விஷயத்தையும் எந்தவொரு மின்னணு ஊடகத்திலும் காண்பிப்பது தடைசெய்யப்படும். 48 மணி நேரத்திற்குள் முடிவடையும் மேற்கண்ட பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக வெளியாகும் கணிப்புகள் அந்தந்த வாக்குப்பதிவுகளின் திசையை மாற்றியமைக்கலாம் என கருதப்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.